ஈரோட்டில் பலாப்பழம் சாப்பிட கூரையை உடைத்தெறிந்த யானை வீடியோ!
ஈரோடு:சத்தியமங்கலம், கடம்பூர் அடுத்த அத்தியூரில் சனிக்கிழமை (மே 13) பலாப் பழத்தைத் தின்பதற்குக் கூரையைப் பிடுங்கி உள்ளே நுழைந்த யானையால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் பூதிக்காடு, செங்காடு, அத்தியூர் பகுதியில் ஒற்றை யானை தினந்தோறும் விவசாய நிலங்களில் புகுந்து வாழை, தென்னை பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அத்தியூர் மானாவாரி விவசாயத் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில், பலாப் பழத்தை வைத்துவிட்டு விவசாயி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது, வனத்திலிருந்து வெளியேறிய யானை, பலாப் பழத்தின் வாசத்தை நுகர்ந்து அங்கு வந்துள்ளது. பின்னர், ஆட்டுப்பட்டுக்குள் யானை செல்ல முயன்றதால், பட்டியிலிருந்த ஆடுகள் ஓட்டம் பிடித்தன.
மேலும், பட்டியின் மேற்கூரையைப் பிரித்தெடுத்து உள்ளே சென்ற யானை, பலாப் பழத்தைத் தின்று விட்டு வெளியேறியது. அப்போது அங்கிருந்த விவசாயிகள் யானையை விரட்டினர். பலாப் பழத்தைத் தின்ற மகிழ்ச்சியில் யானை காட்டுக்கள் சென்றது. தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகப் பகலிலேயே, விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் இந்த யானை, காட்டுக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பழச்சாறு அருந்தி முடித்துக் கொண்ட ஆசிரியர்கள்!