டெல்லியில் அமையும் நினைவுப் பூங்காவிற்கு காஞ்சியில் மண் சேகரித்த பள்ளி மாணவர்கள்! - வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன்
Published : Sep 26, 2023, 9:38 PM IST
காஞ்சிபுரம்:டெல்லியில் நினைவுப் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக இந்தியாவின் அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் சேகரித்து அனுப்ப வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 இடங்களில் இருந்து மண் சேகரித்து அனுப்பப்படும் என காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, "எனது மண் எனது தேசம்" என்ற திட்டத்தின் கீழ், மண் சேகரிக்கும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள பிஏவி ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் ஒவ்வொருவராக இத்திட்டத்தின் கீழ் மண்ணை சேகரித்தனர்.
இது குறித்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன் கூறும்போது, "இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும், ஒவ்வொரு வார்டுகளிருந்தும் மண் சேகரிக்கப்பட்டு, டெல்லி போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த வீரர் வீராங்கனைகளை நினைவு கூறும் விதமாக அமையவிருக்கும் பூங்காவிற்கு, இந்த மண் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளது" எனக் கூறினார்.