திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் முறைகேடாக விமானங்களில் கொண்டு கடத்திவரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சோதனை நடத்தும் சுங்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 5) துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்த போது எந்த பொருளும் சிக்கவில்லை.
எனினும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அந்த நபரின் செருப்பை சோதனையிட்டனர். அப்போது செருப்புக்குள் 389 கிராம் தங்கத்தை மறைத்து, கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 21 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தங்கத்தை கடத்தி வந்தவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாகவே திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.