அவர் இசையும், இவர் கவியும் கொள்ளையடிக்காத மனம் உண்டோ!
ஹைதராபாத்:தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் தோன்றி இருக்கலாம். ஆனால், மக்கள் மனதில் நிலையாய் நின்றவர்கள் வெகு சொற்பமானவர்கள் தான். அப்படிப்பட்ட இரண்டு ஆளுமைகளைப் பற்றி ஒரு சிறப்பு பதிவு இது.
கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய மனதை வருடும் வரிகளாலும், மெல்லிசை மன்னன் தன் மனம் தொடும் இசையாலும் நம் அனைவரின் மனதையும் ஆட்கொண்டு, காலத்திற்கும் என்றென்றும் நம் மனதில் அழியாமல் இனிய நினைவுகளாக நிலை நிற்பவர்கள். மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் இவர்கள் இருவரின் களஞ்சியத்தில் பாடல்கள் உண்டு.
இவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல் மக்கள் மனதில் நிலையாய் நின்றவை எண்ணில் அடங்காதவை. பார்த்த ஞாபகம் இல்லையோ... பருவ நாடகத் தொல்லையோ... என்ற பாடல் வரிகள் மூலம் நம்முடைய மனதில் இருக்கும், காதல் உணர்வுகளைப் பாடலாக படைத்து காதல் உணர்வை நம் மனதில் தைத்தார்கள்.
அதேபோல் யார் அந்த நிலவு... ஏன் இந்த கனவு... என்ற பாடல் மூலம் காதல் தோல்வியில் புண்பட்டு வாடும் இதயங்களுக்கு, மயில் இறகை கொண்டு வருடுவது போல மெல்ல வருடினார்கள். இன்னும், மயக்கமா... கலக்கமா... என இவர்கள் இணைந்து படைத்த பாடல் இன்று வரை, நம் அனைவரின் உள்ளங்களில் இருக்கும் காயங்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது. குறிப்பாக, இத்தகைய பாடல்கள் நமக்கு வாழ்வின் தத்துவத்தைப் புரிய வைத்தது.
இளையராஜாவுக்கு வாலி என்றால், ஏ.ஆர். ரஹ்மானுக்கு, வைரமுத்து என்றால், யுவன் சங்கர் ராஜாவுக்கு நா. முத்துக்குமார் என்றால், இவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக இருக்கக்கூடியவர்கள் தான், மெல்லிசை மன்னன் MSVயும் கவியரசர் கண்ணதாசனும்.
எங்கேயும்... எப்போதும்... சங்கீதம்... சந்தோஷம்... என இவர்கள் இணைந்து படைத்த பாட்டிற்கேற்ப நம் மனதில் மெல்லிசையாகவும், தேன் கவியாகவும் என்றென்றும் நம் மனதில் நீங்கா நினைவுகளாக நிலைத்திருக்கும் மெல்லிசை மன்னனையும், கவியரசரையும், நினைவு கூருவதில் பெருமிதம் கொள்கிறது ஈடிவி பாரத் தமிழ்நாடு