நூதனத் திருட்டில் ஈடுபட்ட எலி... வளையில் சிக்கிய ரூ.1500.. பழக்கடையில் நடந்தது என்ன? - tiruppur news today
திருப்பூர்பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது கடையில் நாள்தோறும் பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. அதிலும், இரவு நேரங்களில் மகேஷ் வைத்துச் செல்லும் பணம் காலை நேரத்தில் இல்லாமலே இருந்துள்ளது.
மேலும், ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்ததால் 100, 50 ரூபாய் என வைத்து பார்த்தபோதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர் கதையாகி வந்துள்ளது. இதனால் மகேஷ் தனது கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, வழக்கம்போல் பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
எனவே, கடையில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை மகேஷ் ஆய்வு செய்துள்ளார். அதில், அதிகாலை 4 மணியளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று, பிளாஸ்டிக் கூடையில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு, எலி இருந்த வளையை மகேஷ் கண்டறிந்துள்ளார். பின்னர் அதனுள் சோதனையிட்டதில், இது நாள் வரையில் காணாமல் போன பணம் அனைத்தும் எந்த வித சேதமும் இன்றி எலி வளையில் இருந்துள்ளது. மேலும், அதனை எண்ணிப் பார்த்தபோது, அதில் ஆயிரத்து 500 ரூபாய் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.