தருமபுரம் ஆதீனம் மடத்துக்கு குடும்பத்தோடு வந்த ரஜினியின் இளைய மகள்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த 'தருமபுரம் ஆதீனத் திருமடம்' உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டண பிரவேச விழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இப்பெருவிழாவின் கொடியேற்றம் கடந்த மே மாதம் 31ஆம் தேதி மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 'தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்' முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 6ஆம் நாள் திருக்கல்யாண வைபவமும், 8ஆம் நாள் திருத்தேர் உத்ஸவமும், 10ஆம் நாள் தருமபுரம் ஆதீன கர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்ற உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் தம்பதியினர் இன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற தம்பதியினர் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனர்.