தலைவா..தலைவா..என அலறவிட்ட கோஷம்! சிந்தனையிலும் வாழ்க்கையிலும் இதுதான் முக்கியம்..! - ரஜினிகாந்த பொங்கல் வாழ்த்து - ரஜினிகாந்த ரசிகர்கள்
Published : Jan 15, 2024, 12:58 PM IST
சென்னை:உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை இன்று (ஜன.15) உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் அதிகாலையில் எழுந்து, கோலமிட்டு, புத்தாடைகள், புதுப்பானையில் புத்தரசி பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே தமிழ் திரையுலக பிரபலங்கள் வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெறுவதற்காக காலை முதல் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு குவிந்தனர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில், தனது வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று பொங்கல் பண்டிகை வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவர் வருவதைப் பார்த்த ரசிகர்கள் தலைவா.. தலைவா.. என்று ஆரவாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.