Jailer Movie Release: வெளியானது ஜெயிலர்.. திருவிழாவாக கொண்டாடிய திருச்சி ரசிகர்கள்! - திருச்சி சோனா மீனா தியேட்டர்
திருச்சி: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமான ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லாததால் படம் 9 மணிக்கும், பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் முதல் காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகில் உள்ள 'சோனா மீனா' திரையரங்கில் திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடியும், கலர்ப் பொடி தூவியும், ரஜினிகாந்த் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இதனால் திரையரங்கம் முழுவதும் விழாக் கோலமாக காணப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக படத்தின் ரிலீசை முன்னிட்டு சிறந்த கல்வியாளர்களுக்கு பண உதவி வழங்குதல், ஏழை மக்களுக்கு வேட்டி, புடவை வழங்குதல், கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குதல், போன்ற நற்பணி செய்வதாகத் தெரிவிதனர்.
இதையும் படிங்க:Jailer FDFS: வெளியானது ஜெயிலர்... தியேட்டர்களை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்!!