ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு செய்த ரஜினி ரசிகர்கள்! - மயிலாடுதுறை செய்திகள்
மயிலாடுதுறை: நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 169 வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று (ஆகஸ்ட் 10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படமானது தமிழகத்தில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.
மேலும், உலகம் முழுவதும் ப்ல்வேறு பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் பேனர் வைத்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறையில் உள்ள விஜயா, ரத்னா மற்றும் சீர்காழி பாலாஜி உள்ளிட்ட திரையரங்களில் படம் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் திரையரங்குகளின் வாயில் பகுதிகளில் ஏராளமான பேனர்களை வைத்து பல்வேறு வகைகளில் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக ஜெய்லர் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டி மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயிலில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து திரையரங்கம் முன்பு ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு காட்சிகள் துவங்கிய நிலையில், பொதுமக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று திரையங்கு உள்ளே சென்று படம் பார்த்து வருகின்றனர். படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.