தமிழக திருப்பதியில் பிரம்மோற்சவ பெருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்! - Purattasi Brahmotsavam at Oppiliappan temple
Published : Sep 17, 2023, 11:20 AM IST
தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா இன்று (செப்.17) கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
தமிழக திருப்பதி என்றும் தென்னக திருப்பதி என்றும் போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் 16வது திவ்ய தேசமாகும்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று (செப் 17) வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், மூலவர் பெருமாள் மற்றும் தாயார் வெள்ளி கவசத்தால் அலங்கரித்து அருள்பாலித்தனர்.
மேலும், உற்சவர் பெருமாள் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் கொடிமரம் அருகே விசேஷ பட்டாடைகள் மற்றும் மலர்மாலைகள் சூட்டி எழுந்தருளினார். இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவில், பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் என கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி, சிறப்பு பூஜைகள் செய்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கும், உற்சவர் பெருமாள் மற்றும் தாயாருக்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. அதனைத்தொடர்ந்து, வரும் 25ஆம் தேதி புரட்டாசி மாத சிரவணத்தை முன்னிட்டு, கோரத உலாவும், அதனை தொடர்ந்து பகலிராப் பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 26ஆம் தேதி மூலவர் திருமஞ்சனம் மற்றும் சப்தாவர்ணம் நடைபெற்று இவ்வாண்டிற்காண புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவு பெறுகிறது.