பேருந்தை இயக்கும் போது திடீர் நெஞ்சுவலி… சாமர்த்தியமாகச் செயல்பட்ட அரசுப்பேருந்து ஓட்டுநரால் விபத்து தவிர்ப்பு! - பேருந்து ஓட்டுநர்
Published : Nov 11, 2023, 10:48 AM IST
புதுக்கோட்டை: தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி நேற்று (நவ. 10) சென்ற அரசு பேருந்தை திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வீரமணி இயக்கியுள்ளார். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைச் செல்லும் வழியில் வீரமணிக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து கந்தர்வக்கோட்டை அருகே பேருந்தை ஒரு மருந்தகத்தில் நிறுத்தி மருந்து சாப்பிட்டு, பின்னர் பேருந்தை இயக்கியுள்ளார். தொடர்ந்து நெஞ்சுவலியை உணர்ந்த வீரமணி உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, அந்த வழியே வந்த மற்றொரு பேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்துள்ளார். அந்த பேருந்தில் சுமார் 70 பயணிகள் பயணித்தனர் எனக் கூறப்படுகிறது.
பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பேருந்துடன் சென்று, நடத்துநர் உதவியுடன் சிகிச்சைக்காக வீரமணி அனுமதியாகியுள்ளார். பின், மருத்துவர்கள் ஓட்டுநருக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை வருவதற்குள் இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டும், பேருந்தை முறையாக இயக்கி விபத்தில்லாமல் பயணிகளின் உயிரைப் பாதுகாத்த ஓட்டுநர் வீரமணிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.