குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் உலா வந்த கரடிகள்.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
Published : Nov 26, 2023, 3:50 PM IST
நீலகிரி :வனவிலங்குகளின் எண்ணிக்கை தற்போது நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. காட்டு மாடுகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் வரத் தொடங்கி உள்ளன.
குறிப்பாக, சமீப காலமாகவே கோத்தகிரி பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோத்தகிரி கடைவீதி பகுதியில் நான்கு கரடிகள் குட்டிகளுடன் உலா வந்ததால், குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.