புற்றுநோய் சிகிச்சைக்காக இனி வெளியூர் செல்லத் தேவையில்லை - அமைச்சர் பொன்முடி - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள பஞ்சமாதேவியில் நெய்வேலி நோக்கி வந்த தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விபத்துக்குள்ளானவர்களை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "புற்றுநோய் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக் கூடிய பொதுமக்கள் புதுச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மையத்தை, இனி விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நலத்திட்ட உதவிகளும் வழங்கியுள்ளேன். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளேன். மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் ஆகியோரிடம் இந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவம் அளிக்க வேண்டுமென கூறியுள்ளேன்” என தெரிவித்தார்.