தென்காசியில் 300 சீர்வரிசைகளுடன் சமத்துவப் பொங்கலை கொண்டாடிய ராணிகள்! - pongal festival
Published : Jan 12, 2024, 10:58 AM IST
தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், விவசாயத்தைப் போற்றும் வகையிலும், ஐந்து வகை நிலங்களை குறிக்கும் வகையிலும் 300 சீர்வரிசைகளுடன் வித்தியாசமான முறையில் சமத்துவப் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு விவசாயத்தைப் போற்றும் வகையில், நேற்று (ஜன.11) ஒவ்வொரு துறை சார்ந்த மாணவிகள், ஒவ்வொரு விதமான கலை நிகழ்வுடன், 300 சீர்வரிசைகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் சிலம்பு, ஒயிலாட்டம், பறை இசை, புலி ஆட்டம் என பல்வேறு விதமாக நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து, பொங்கல் கொண்டாட்டத்தில், கல்லூரியில் பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் சீர்வரிசை கொடுக்கப்பட்டது. மாணவிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.