மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்! - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
Published : Jan 12, 2024, 3:39 PM IST
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜனவரி 12) சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த திருவிழாவில், அதிர்வு கிராமிய கலைக்குழுவின் சார்பில் மாடு ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பொங்கல் பானைக்கு பூஜை செய்து புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோராக்கி பொங்கலோ பொங்கல் என முழுக்கமிட்டு அனைவருக்கும் வழங்கினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் அரசு துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் பாரம்பரிய உடையான சேலை, வேட்டி அணிந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் வாழ்த்துக்ளைத் தெரிவித்தார்.