"கோயிலுக்கு வெளியே நான்தான் சண்டியர்".. பழனி கோயில் அதிகாரிகளை மிரட்டும் காவலர் - சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ
Published : Oct 24, 2023, 6:14 PM IST
|Updated : Oct 24, 2023, 6:30 PM IST
திண்டுக்கல்: பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரபு என்பவர், பழனி தாராபுரம் சாலையில் வழக்கமான ரோந்து பணியை ஈடுபட்டு இருந்தார். அப்போது பழனி கோயில் நிர்வாக ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது, அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
அப்போது கோயிலுக்கு காவல் துறையினர் வரும்போது அனுமதி அளிக்காமல், அதிகாரிகளின் அடையாள அட்டை கேட்டு சோதனை செய்வதாகவும், கோயில் நிர்வாக ஆணையரைத் தகாத வார்த்தையால் திட்டி பேசியுள்ளார். மேலும் கோயில் நிர்வாக அலுவலர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், அவர்கள் அடாவடித்தனம் செய்வதாகவும் பேசியுள்ளார்.
தொடர்ந்து கோயிலில் பணிபுரிபவர்கள் வெளியே வந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மரியாதை அற்ற முறையில் பேசியுள்ளார். காவலர் பிரபு தகாத முறையில் பேசுவதை வீடியோவாக பதிவு செய்த நபர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அக்காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.