மெஷினில் போட்ட கார்டு வராத கடுப்பில் வாடிக்கையாளர் செய்த செயல்! போலீஸ் வலைவீச்சு - ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை: ஜாம்பஜார் பாரதி சாலை அருகே ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த ஏடிஎம்மில் இருந்து திடீரென வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் ஒளித்ததால் உடனே ஜாம்பஜார் போலீசாருக்கு இது குறித்து வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் போலீசார் ஏடிஎம்மிற்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்த போது, பணம் வராததால் ஏடிஎம் கார்டை எடுக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் கார்டும் மாட்டிக் கொண்டுள்ளது.
இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டரை உடைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜாம்பஜார் போலீசார் ஏடிஎம் ஷட்டரை மூடி பாதுகாப்புக்காக காவலர் ஒருவரை பாதுகாப்புக்காக நிற்க வைத்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் ஏடிஎம் மானிட்டரை உடைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.