சென்னையில் அசத்தல் நடனத்துடன் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி 07.08.2023 முதல் 11.08.2023 வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழகத்தில் இளைஞர்களிடையே கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் அதிகரித்து வருவதைத் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த வாரம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தெற்கு மண்டலம் காவல் இணைய ஆணையர் சிபி சக்கரவர்த்தி தலைமையில், சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தம்பாக்கம் - போரூர் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் காவல்துறையினர் நடன குழுவை வரவழைத்தனர். அவர்கள் சாலையின் நடுவே பிரபல சினிமா பாடல்களுக்கு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடனமாடி போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை வாகனங்களில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மேலும் "போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்" என்று உறுதி மொழியும் ஏற்றுக்கொண்டனர்.