சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! - police chasing robbers video
திருவண்ணாமலை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சென்னை கொளத்தூரைச் சேர்ந்த யுவராஜ், பாலாஜி ஆகிய இருவரும் கடந்த 23ஆம் தேதி பண்ருட்டி அருகிலுள்ள உறையூர் என்ற கிராமத்தில் 19 சவரன் நகை மற்றும் ஒரு காரை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து சிக்னல் மூலம் அவர்களது நகர்வை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த கார் திருவண்ணாமலை நோக்கிச் சென்றது தெரியவந்தது. பின்னர், கடலூர் காவல் துறையினர் இது குறித்து திருவண்ணாமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
செல்போன் சிக்னலின் நகர்வை வைத்து திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் புறநகர் டிஎஸ்பி குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குற்றவாளிகளின் காரை துரத்திச் சென்றனர். அப்போது கார் திருவண்ணாமலை நகரப் பகுதியில் சண்முகா பள்ளி அருகில் சென்றபோது, அந்த காரை காவல் துறையினர் சுற்றி வளைத்து சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்டவர்களை கடலூர் மாவட்ட காவல் துறையினரிடம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒப்படைத்தார். பிடிபட்ட இருவர் கொண்டு சென்ற கார் மற்றும் சுமார் 19 சவரனுக்கு மேல் இருந்த தங்க நகைகள் ஆகியவற்றை திருவண்ணாமலை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை கடலூர் மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:5 ஆண்டுகளாக டிமிக்கி - டெல்லியில் மடக்கிப் பிடித்து கைது செய்த கொரட்டூர் போலீஸ்!