குன்னூர் காட்டேரி பூங்காவில் 1.70 லட்சம் மலர் நாற்றுகள் நடவு!
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது, குன்னூர் காட்டேரி பூங்கா. இப்பூங்கா தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இரண்டாவது சீசனும் நிலவும்.
இந்த இரண்டு சீசன்களிலும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவார்கள். அவர்களைக் கவரும் விதமாக, காட்டேரி பூங்காவில் விதவிதமான மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன. அடுத்த மாதம் கோடை சீசன் தொடங்க உள்ளதால், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக புதிய வகை மலர் நாற்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் மலர் நாற்றுகளை நடவு செய்தனர்.
இதில் பிரான்ஸ், ஆப்ரிக்கா, நெதர்லாந்து மற்றும் கொல்கத்தா, காஷ்மீரை சேர்ந்த டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பேன்சி, பெகோனியா, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட் வில்லியம், பிரிமுளா உள்ளிட்ட 30 வகை மலர்களின் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காட்டேரி பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள செடிகள், ஏப்ரல் மாதம் முதல் மலரத் தொடங்கும். விதவிதமான மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் என நம்புகிறோம்" என்றனர்.