காய்கறி விலை உயர்வால் தூத்துக்குடியில் மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்! - நகரை மீன்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கத்திரிக்காய், அவரைக்காய் உள்ளிட்டப் பல்வேறு காய்கறிகளின் விலை நூறு ரூபாய்க்கு மேல் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய மக்கள் காய்கறிகளை வாங்கி, சமையல் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இதை அடுத்து பொதுமக்கள் தூத்துக்குடியில் உள்ள புதிய துறைமுக கடற்கரைப் பகுதிக்கு மீன்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் இருந்து, ஃபைபர் படகு மூலம் அதிகாலை கடலுக்குச் சென்று மீனவர்கள் பிடித்து வரும் சாலை மீன், கீரிசாலை, பாறை மீன், நகரை மீன், விலை மீன், நண்டு உள்ளிட்ட மீன்கள் ஐஸ்கட்டி மூலம் பதப்படுத்தாமல் உயிருடன் கிடைப்பதாலும், இங்கு குறைவான விலையில் மீன்கள் கிடைப்பதாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்க குவிந்தனர்.
மேலும், தற்போது காய்கறிகளின் அதிகமாக இருப்பதாலும், மீன்களின் விலை குறைவாக இருப்பதாலும் தாங்கள் மீன்களை வாங்கிச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.