Aadi Amavasai: ஆடி அமாவாசையையொட்டி ஈரோடு கூடுதுறையில் குவிந்த மக்கள்!
ஈரோடு: காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் சங்கமேஸ்வரர் ஆலயம் பவானி கூடுதுறையில் அமைந்துள்ளது. ஆடி மாதப் பிறப்பையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சங்கமேஸ்வரரை வழிபட்டனர். மேலும் இன்று அமாவாசை என்பதால் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் கரைத்து தங்களது குடும்பம் மற்றும் தொழில் செழிக்க முன்னோர்களை வழிபட்டனர்.
பின்னர், மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி பின்பு சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கிடையே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் ஆடி மாதத்தில் வரும் பிதுர் அமாவாசை ஆடி 31 அன்று வருவதாக புரோகிதர்கள் தெரிவித்ததன் காரணமாக இன்று ஆடி அமாவாசை என்று நினைத்து திதி தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சங்கமேஸ்வரரை வழிப்பட்டுச் சென்றனர். ஆகவே மக்களின் பாதுகாப்பைக் கருதி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காவிரி ஆற்றில் தற்போது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.