காணும் பொங்கல்; கொடிவேரி அணையில் குவிந்த மக்கள்..! - சுற்றுலா பயணிகள்
Published : Jan 17, 2024, 7:52 PM IST
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது, பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், குறைந்த செலவில் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், காணும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தொடர் விடுமுறையை ஒட்டி கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயனிகள் காலை முதலே வரத் தொடங்கினர்.
மேலும், அணையில் குறைந்தளவே கொட்டும் நீரில் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டும், அங்கு விற்க்கபடும் பொரித்த மீன்களை வாங்கி உண்டு மகிழ்ந்தும், பரிசல் பயனம் மேற்கொண்டும் வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் அணையில் குவிந்ததால், சத்தியமங்கலம் பிரதான சாலையிலிருந்து கொடிவேரி அணை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.