வால்பாறைக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்! ...பொள்ளாச்சியில் பரபரப்பு!
Published : Dec 24, 2023, 10:36 PM IST
கோயம்புத்தூர்:தமிழகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று வால்பாறை. வால்பாறையில் வசித்து வந்த மக்கள் நாளடைவில் குடும்பம் சூழ்நிலை காரணமாக வால்பாறையிலிருந்து வெளியேறி திருப்பூர், சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் 40 ஆயிரம் பொதுமக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. தற்போது, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களை முன்னிட்டு வெளியூர் சென்ற பொதுமக்கள் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்குச் செல்ல பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்ல பேருந்து இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்குப் பின் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபடுவதைக் கைவிட்டனர். இதனால், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.