திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மல்லுக்கட்டிய மயில்கள் - வைரல் வீடியோ!
Published : Aug 30, 2023, 7:31 PM IST
திருவண்ணாமலை:புகழ் பெற்றதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பல்வேறு விழாக்கள் மற்றும் மாதந்தோறும் பெளர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும், வருகை புரிந்து அண்ணாமலை மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் மலையை சிவனாக கருதி கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
இந்த கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
இதில், நிருதி லிங்கத்திற்கு எதிரே இரண்டு மயில்கள் நீண்ட நேரமாக ஒன்றுடன் ஒன்று ஊடல் கொண்டு, கூடிக் குலாவியும் மோதிக்கொண்ட நிகழ்வு கிரிவலப் பாதையில் சென்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இரண்டு மயில்களும் நீண்ட நேரமாக கிரிவலப் பாதையில் ஆக்ரோஷமாக பறந்து மோதிக் கொண்ட சம்பவத்தை பொதுமக்களும், பக்தர்களும் வியப்புடன் பார்த்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.