Panguni Uthiram: ராணிப்பேட்டை ஈஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்! - கோயில் செய்திகள்
ராணிப்பேட்டை: பிஞ்சி கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ திரிபுரசுந்தரி உடனாய தேவேந்திர ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு இக்கோயில் வளாகத்தில் திரிபுரசுந்தரி உடனாய ஸ்ரீ தேவேந்திர ஈஸ்வரர்க்கும், ஸ்ரீ முருகப்பெருமான் - ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆகிய சுவாமிகளுக்கும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் பலர் பல்வேறு சீர்வரிசைகளைக் கையில் ஏந்தி கோவில் வளாகத்தில் எடுத்து வந்தனர். பிறகு சிறப்பு அபிஷேகம், விஷேச பூஜைகள், வேத மந்திரங்கள், பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று திரிபுரசுந்தரி அம்மனுக்கும், தேவேந்திர ஈஸ்வரர் சுவாமிக்கும், முருக பெருமாள், வள்ளி தேவசேனா சுவாமிக்கும் புதிய பட்டாடை உடுத்தி, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து காப்புக் கட்டி யாகம் வளர்க்கப்பட்டது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்கத் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதனையடுத்து சுவாமிகளுக்குப் பஞ்சமுக மஹா தீபாரதனை சுவாமிக்கு காட்டப்பட்டது. அதன் பின் பங்குனி மாத உத்திர திருக்கல்யாணத்தில் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா... அரோகரா.. என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சுவாமியை வழிபட்டு தரிசனம் பெற்றுச் சென்றனர்.