உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி!
நாகப்பட்டினம்: இன்று(ஏப்-2) குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, பல்வேறு கிறிஸ்தவ தலங்களிலும் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், குருத்தோலைகளை கையில் ஏந்தியபடியும், கீர்த்தனைகள் பாடியபடியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பவனியில் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், ''கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த வாரம் முழுவதும் புனித வாரம் என்றும் அழைக்கப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியையும், அமைதியின் தூதனாய் இயேசு கழுதையின் மீது ஏறி, அன்றைய நாளின் மக்களுக்கு அமைதியின் செய்தியைக் கூறியதையும் நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இந்த நாளை அனுசரிக்கின்றனர்.
எனவே, இந்த நாள் பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஹோசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர்.
அதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.