பழனி முருகன் கோயிலில் இன்று ரோப் கார் சேவை கிடையாது.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு! - today latest news
Published : Nov 29, 2023, 2:20 PM IST
திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலையில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்ல படிப்பாதை மற்றும் யானைப் பாதை ஆகியவை பிரதான வழியாக உள்ளது.
மேலும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக படிப்பாதை மற்றும் யானைப் பாதையைத் தவிர்த்து, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக ரோப் கார் சேவை பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரோப்கார் சேவை வருடத்திற்கு 45 நாட்களும், மாதத்திற்கு 1 நாளும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும். இதன்படி, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.29) ஒருநாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என பழனி கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
மேலும், பராமரிப்பு பணியின் பொழுது ரோப் காரில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சரி செய்யப்பட்டு, ரோப்கார் பெட்டிகள் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு, நாளை மீண்டும் செயல்படும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.