பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடி வசூல்!
Published : Sep 28, 2023, 10:14 AM IST
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் 5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் வசூலாகி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வருகிற பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக உண்டியல்கள் விரைவில் நிரம்பியது.
இதையடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து இரண்டு நாட்கள் எண்ணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரொக்கமாக 5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் மட்டும் ஆயிரத்து 419 கிராமும், வெள்ளி 18 ஆயிரத்து 185 கிராமும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பணங்கள் ஆயிரத்து 366 என்ற எண்ணிக்கையில் காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும், உண்டியலில் பக்தர்கள் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக் கடிகாரங்கள், தங்க வேல், தாலி, மோதிரம், செயின், தங்க காசு, வெள்ளியால் ஆன காவடி, வளையம், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.