பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக களமிறங்கும் காளைகள்.. திணறும் மாடுபிடி வீரர்கள்! - ஜல்லிக்கட்டு
Published : Jan 16, 2024, 9:46 AM IST
மதுரை: இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அப்போட்டியில் கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றார். இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியுள்ளது.
இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியை வருமான வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர். 8 சுற்றுகளாக நடக்கும் இந்த ஜல்லிக்கட்டில் இதுவரை 4 சுற்றுகள் நிறைவேறின. முதல் சுற்றின் முடிவில், 106 காளைகள் களமிறங்கிய நிலையில் ராஜா, அஜித், தமிழரசன் ஆகியோர் தலா மூன்று காளைகளை அடக்கி முன்னிலை வகித்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்றின் முடிவில் 2 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 3 பேர், பார்வையாளர்கள் 2 பேர், காவல்துறையினர் ஒருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.