ஸ்ரீபெரும்புதூர் விஸ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டர் பாலாபிஷேகம்! - kanchipuram news
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் அமைந்துள்ளது விஸ்வரூப பாலமுருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் ஒரே கல்லால் ஆன 180 டன் எடை கொண்ட 40 அடி உயர விஸ்வரூப பாலமுருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வியாழன் அன்று பால் அபிஷேகம் நடைபெற்றது. ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் இந்த விழாவுக்கு முன்னிலை வகித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் தலைமையில் பெண்கள் 108 பேர் பால்குடம் சுமந்து வந்து முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்தனர். முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் விஸ்வரூப பாலமுருகன் சுவாமியின் 40 அடி சிலைக்குப் பாலாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் பக்தர்கள் பங்களிப்பில் சுமார் 2 ஆயிரம் லிட்டரில் பால் அபிஷேகம் நடைபெற்றது. 40 அடி பிரமாண்ட சிலையில் பால் அபிஷேகம் செய்தது நீர்வீழ்ச்சியில் பால் கொட்டியது போலக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: CCTV VIDEO: திருட வந்த இடத்தில் கடவுளை வணங்கி பயபக்தியுடன் திருடிய திருடன்!