Hockey Asian Champions Trophy: சென்னை வந்த பாக். ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு! - 7th Asian Mens Championship
சென்னை: சென்னையில் 7-வது ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி வரும் நாளை முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா உள்பட 7 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதற்காக மலேசியா, ஜப்பான் உள்பட நாடுகளின் ஹாக்கி வீரர்கள் வந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டு ஹாக்கி வீரர்கள் பயிற்சியாளர் ஷானஸ் ஷேக், ஹாக்கி அணி கேப்டன் உமர், வீரர்கள் என 26 பேர் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கரகாட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஷானஸ் "இந்தியாவில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் விளையாடுவது கவனத்துடன் விளையாட வேண்டியதாக இருக்கும். அப்போது தான் சிறப்பாக விளையாட முடியும். இரு நாட்டு அணிகளும் கிரிக்கெட், ஆக்கி போட்டியில் விளையாடுவது நல்லதாகவே இருக்கும். இந்தியாவில் விளையாடி விட்டுத் திரும்பிச் செல்லும் போது அடுத்த கட்ட நிலை முன்னேறிச் செல்வதாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.