''தனி கட்சியா?''.. ஆதரவாளரின் கேள்விக்கு ஓபிஎஸ் பதில் - Chennai Airport
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக இன்று (ஏப்ரல் 21) சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்களில் ஒருவர், ‘இனி தனி கட்சி, தனி கொடியா?’ என கேள்வி எழுப்பினார்.
இதனைக் கேட்ட ஓபிஎஸ், சிரித்துக் கொண்டே அங்கு இருந்து சென்றார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் கொடியை அதிமுக உறுப்பினர்கள் அல்லாத யாரும் பயன்படுத்தக் கூடாது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய ஓபிஎஸ், “எந்த நீதிமன்றத்திலும் அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என இதுவரையில் கூறவில்லை” எனக் கூறினார்.
முன்னதாக, அவர் வந்த காரில் அதிமுகவின் கொடி இடம் பெற்றிருந்தது. மேலும், நேற்று (ஏப்ரல் 20) எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.