பழனி முருகன் கோயிலில் உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா? - Collection 4 crore and 69 lakhs
திண்டுக்கல்:பழனி தண்டாயுதபாணி கோயிலில் இரண்டு நாட்களாக நடந்த உண்டியலில் பணம் எண்ணும் பணிகள் இன்று (மே.10) நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில், 4 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 887 ரூபாய் காணிக்கையாக வசூல் ஆகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதனிடையே, கடந்த 26 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அங்கு நிரம்பி வழிந்த நிலையில், அங்குள்ள உண்டியல்களும் நிரம்பின.
இதையடுத்து உண்டியல்கள் தகுந்த பாதுகாப்புகளுடன் திறக்கப்பட்டு, மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. அவ்வாறு, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக ரூ.4,68,98,887 கிடைத்துள்ளது. 1,072 கிராம் தங்கமும், 18,611 கிராம் வெள்ளியும், 1309 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளன.
உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியினால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயிலில் கல்லூரி மாணவியர்கள், கோயில் பணியாளர்கள், கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.