தேனியில் நடந்த சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்.. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
தேனி:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர், “காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு காலி பணியிடங்களில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். உணவு மானிய செலவு மற்றும் எரிவாயு சிலிண்டர் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
மேலும், ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு சத்துணவு அமைப்பாளரிடமும் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, ஆட்சியர்கள் மூலம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்றும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசாவிட்டால் மாநில அளவில் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.