தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி தீ விபத்து! - Theni Kumuli National Highway
தேனி:கம்பத்தில் இருந்து நேற்று இரவு பெங்களூரு நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதியது.இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.
மேலும், சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவி எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கம்பம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானவுடன் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தின் மீது மோதி உயிரிழந்தவர் சின்னமனூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பதும் அவர் கம்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இரவு நேர பணிக்காக கம்பம் காவல் நிலையத்திற்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.