Nilgiris Rain: அவலாஞ்சியில் 204 மி.மீ மழைப் பதிவு - பள்ளி விடுமுறை
நீலகிரிமாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இன்று (ஜூலை 6) ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் 42 அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் உள்பட 457 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
அதேநேரம், 283 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக சாலையில் மரங்கள் முறிந்து விழந்து உள்ளன. அது மட்டுமல்லாமல் சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது. எனவே, இவற்றை களப் பணியாளர்கள் உடனுக்குடன் சீர் செய்து வருகின்றனர். மேலும், நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையின் அளவு வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, அவலாஞ்சி - 204 மில்லி மீட்டர், அப்பர் பவானி -110 மி.மீ, பந்தலூர் - 70 மி.மீ, எமரால்டு - 41மி.மீ, சேரங்கோடு - 93மி.மீ, ஓவேலி - 54மி.மீ, நடுவட்டம் - 58 மி.மீ, குந்தா - 24 மி.மீ, தேவாலா - 68 மி.மீ, கூடலூர் - 44 மி.மீ மற்றும் குன்னூரில் 11 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.