ஊட்டி பூங்கா பணியாளர்கள் ஒப்பாரி பாடலுடன் நூதன போராட்டம்! - ooty botanical garden
நீலகிரி:தமிழகத்தில் மலைவாழ் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான ஒன்று நீலகிரி. இங்கு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும், அரசு சார்பில் தாவரவியல் பூங்கா,காட்டேரி பூங்கா, ரோஜா பூங்கா என ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மக்களை கவரும் வண்ணம் பாராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவைப் பராமரிக்க, தற்காலிக ஊழியர்களாக, 500- க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு,நாள் ஒன்றுக்கு ரூ.400 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள், தற்காலிகமாக இருக்கும் தங்கள் பணியை நீட்டித்துத் தருமாறும், மேலும் சம்பளத்தை ரூ.700-ஆக உயர்த்தவும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம், பண்ணை பணியாளர்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியம் , பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் என்பன உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை முன் வைத்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் கூடிய, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி பாடல்களைப் பாடியும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த, பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதுவரை, இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டம் நான்காவது நாளாக நீட்டித்துக் கொண்டே செல்வதால், பூங்கா பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?