“ஸ்வீட் எடு, கொண்டாடு”.. தீபாவளியை முன்னிட்டு புதிய ஸ்வீட்ஸ் வகைகள் அறிமுகம்.. - bakery
Published : Nov 11, 2023, 6:58 PM IST
தேனி: சின்னமனூர் நகரில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு வகைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு பல புதிய ரக இனிப்பு வகைகளை பேக்கரி உரிமையாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பலகாரங்களும், பட்டாசும் தான். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு பலகாரங்களின் விற்பனை மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும், இனிப்பு கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில், தேனி மாவட்டத்திலும் தீபாவளி உற்சாகம் சற்றும் குறையவில்லை. பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகளில் இனிப்பு மற்றும் காரம் வகைகளுக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கி உள்ளன. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டர் மைசூர்பா, முந்திரி மைசூர்பா, ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்டில் இருந்து தயாராகும் இனிப்பு வகைகள் என பல புதிய ஸ்வீட்ஸ் ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர், கடை உரிமையாளர்கள்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது, இனிப்பு வகைகளின் விற்பனை அமோகமாக இருந்தது. அதேபோல இந்த ஆண்டும் இனிப்பு வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், பூஸ்ட் மற்றும் ஹார்லிக்ஸ்-ல் இருந்து தயாரிக்கப்பட்ட இனிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதாகவும், நல்ல தரத்திலும், குறைந்த விலையில், தீபாவளி ஆஃபர்களில் இனிப்புகளை விற்பனை செய்து வருவதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.