நவராத்திரி 2ஆம் நாள்; அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளிய அலங்காரத்தில் காட்சி தந்த மதுரை மீனாட்சி அம்மன்! - அர்ஜூனனுக்கு பாசுபதம் அலங்காரத்தில் மீனாட்சி
Published : Oct 17, 2023, 11:57 AM IST
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இங்கு நடைபெறும் நவராத்திரி விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தற்போது நவராத்திரி விழாவை முன்னிட்டு, 9 நாட்களிலும் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு கோலத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து அருள் பாலிப்பார். அதன்படி, 15ஆம் தேதியான விழாவின் முதல் நாளில் நேற்று முன்தினம் இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து, 2ஆம் நாளான நேற்று அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளிய அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மேலும், ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி 2ஆம் பிரகாரத்தில் கொலு அலங்காரத்தில் வைக்கப்பட்டுள்ள சுவாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ள கொலு அலங்காரத்தையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.