திருவண்ணாமலையில் சூடிபிடித்த இயற்கை காய்கறி விற்பனை.. ஆர்வமுடன் வாங்கிச் சென்ற பொதுமக்கள்!
Published : Sep 11, 2023, 10:37 AM IST
திருவண்ணாமலை:ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை நகரின், பெரியார் சிலை எதிரே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், இயற்கை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப். 10) இயற்கை காய்கறி சந்தை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம், சொர்ப்பனந்தல், கடலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் இயற்கையாக விளைந்த புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இது மட்டுமின்றி, கற்பூர வாழை, ஏளக்கி வாழை, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கையாக விளைந்த பழ வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும், பண்ணை கீரை, அரை கீரை, சிறு கீரை, பொன்னாங்கண்ணி கீரை மற்றும் சிறு தானிய வகைகளான சாமை, வரகு, தினை, குதிரை வாலி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இயற்கை காய்கறி சந்தையில், ஏராளமான பொதுமக்கள், இயற்கையாக விளைந்த காய்கறி மற்றும் பழங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.