Nagaland: ராட்சத பாறை சரிந்ததில் சுக்குநூறாக நொறுங்கிய கார்.. பதற வைக்கும் காட்சிகள்! - வைரல் வீடியோ
நாகாலாந்து: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாகாலாந்து மாநிலம், திம்மாபூர் மாவட்டத்தில் உள்ள சுமோகெடிமா என்னும் பகுதியில் நேற்று(ஜூலை 4) மாலை கனமழை பெய்துள்ளது. அப்போது, மாலை 5 மணியளவில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அந்த நேரத்தில், திடீரென மலையில் இருந்த சரிந்த ராட்சதப் பாறை, அங்கு நின்று கொண்டிருந்த காரின் மேல் விழுந்து உள்ளது.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாறை விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி உள்ளன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திம்மாபூர் மற்றும் கோஹிமா இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடம், நிலச்சரிவு மற்றும் பாறைகள் உள்ள ‘பகலா பஹர்’ (Pakala Pahar) என அறியப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, விபத்தால் பாதிக்கப்பட்ட காருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.