CCTV: லஞ்ச் சாப்பிடபோன கேப்பில் பேருந்தையே திருடிய பலே திருடன் - தனியார் பேருந்து திருட்டு
திருநெல்வேலி:பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர், சுடலை முத்து. தனியார் சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பெருமாள்புரம் காவல் நிலையம் அருகே பேருந்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள தனது வீட்டுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பேருந்து மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தனியார் பேருந்து நிறுவனம் சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து மாயமானது குறித்து தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தனியார் பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச்சென்றது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் நேற்றிரவு போலீசார் ரோந்து சென்றபோது சாலையோரம் சந்தேகத்துக்கு இடமான வகையில் பேருந்து நிற்பதைக் கண்டனர். விசாரணையில், அது திருநெல்வேலியில் திருடப்பட்ட பேருந்து என்பது தெரியவந்தது. தகவலறிந்த திருநெல்வேலி போலீசார், தூத்துக்குடிக்குச் சென்று அந்த பேருந்தை மீட்டனர். பேருந்தை திருடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் துப்பாக்கியுடன் வலம் வந்த மான் வேட்டை கும்பல் கைது!