பங்காரு அடிகளாரின் மறைவு; மலேசியாவில் இருந்து இரங்கல் தெரிவித்த தேவா! - முகஸ்டாலின்
Published : Oct 20, 2023, 11:45 AM IST
மலேசியா:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று (அக்.19) இயற்கை எய்தினார். ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் கருவறை சென்று பூஜை செய்யலாம் எனவும், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்தவர், பங்காரு அடிகளார். சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து முன்மாதிரி கோயிலாக மேல்மருவத்தூர் கோயிலை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் மறைந்த பங்காரு அடிகளாரின் மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையி,ல் பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா மலேசியாவில் இருந்து அடிகளாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “எங்களது ஆன்மீக குருநாதர் ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் ஓங்காரத்தில் கடந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கடந்த வாரம்தான் பங்காரு அடிகளாரைச் சந்தித்தேன். அடிகளாரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் இருக்கும். ஓம் சக்தி ஓம் சக்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.