‘போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள்’ - ரவிக்குமார் எம்.பி.
விழுப்புரம்மாவட்டம்,மகாராஜபுரத்தில் எம்.பி. ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஜிப்மர் நிர்வாகம் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பினை கிடப்பில் போடுவதாக அறிவித்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பினை கிடப்பில் போடுவதற்குப் பதிலாக ரத்து செய்யப்படும் என ஜிப்மர் இயக்குநர் அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளது. புதியதாக பொறுப்பேற்ற டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பாகப் பணியாற்றி முதலமைச்சரின் நன்மதிப்பினை பெறவேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பிடிஆர் ஆடியோ விவகாரத்தால் தான் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றதா என செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த எம்.பி., “போலியான ஆடியோ வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள். அந்த ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ விவகாரத்தினால் அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை. வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வந்த வீடியோ விவகாரத்தில் பாஜகவினர் போலியான வீடியோ வெளியிட்டது அம்பலமானது. மேலும், ராஜஸ்தானை போல தமிழ்நாடு அரசும் சுகாதாரத் துறையை மேம்படுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:"நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்" - முதலமைச்சர் ஸ்டாலின்!