"அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு துறையையும் ஆளுவார்கள்" - கனிமொழி எம்.பி. பேச்சு! - Vallanadu
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கீழ வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளியை இன்று (ஆகஸ்ட். 6) நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி, அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்காக இந்த அரசு மாதிரி பள்ளி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் வரும் காலத்தில் நிச்சயம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையையும் ஆளுவார்கள்.
கொரோனா கால கட்டத்தில் உலகிற்கே மருந்து கொடுத்தது நாம் தான். ஆனால் இங்கு இருக்கக் கூடிய மனிதர்களை மனிதர்களாக மதிக்க நாம் தவறி விடுகிறோம். ஜாதி, மதம், ஆண், பெண் என்ற பிரிவினையுடன் மிகப்பெரிய மூட நம்பிக்கையுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு கால கட்டத்தில் பல்வேறு சமூகத்தினருக்கும் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு இந்த கல்வி என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது.
அதை மாற்ற வேண்டும் என்று தான் பெரியார் போன்றவர்கள் பாடு பட்டார்கள்" என்று கனிமொழி எம்.பி கூறினார். விழாவில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.