பழனி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு: காணிக்கையை வாரி வழங்கிய பக்தர்கள்! - temple news
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவது வழக்கம். பின் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படும்.
அதுபோல உண்டியல் நிறைந்ததை அடுத்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. சுமார் 2 நாட்கள் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில், ரொக்கமாக 2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1025 கிராமும், வெள்ளி 13,573 கிராமும், வெளிநாட்டு கரன்சி 878 நோட்டுகளும் என வருவாயாக கிடைத்துள்ளது.
இது வெறும் 23 நாட்களில் கிடைத்த வருவாய் ஆகும். உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசுகள் போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.