தண்ணீர் என குளுக்கோஸ் குடிக்கும் குரங்குகள்..! அரசு சுகாதார நிலையத்தின் அலட்சியத்தால் அவலம்! - Peranampattu hospital
Published : Sep 30, 2023, 10:25 AM IST
வேலூர்:பேர்ணாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு செலுத்தும் குளுக்கோசை தண்ணீர் என குரங்குகள் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பேர்ணாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு செலுத்திய ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டில்களை அப்புறப்படுத்தாமல், மருத்துவமனையின் பின்புறத்தில் கொட்டப்பட்டு காணப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள குரங்குகள் குளுக்கோஸ் பாட்டில்களை தண்ணீர் என்று நினைத்து குடிக்கின்றன.
குளுக்கோசை தண்ணீர் என்று நினைத்து குடிப்பதாலும், குளுக்கோஸ் பாட்டில்களில் உள்ள ஊசிகளை கடித்து விழுங்குவதாலும் குரங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நோயாளிகளுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் மற்றும் ஊசிகள் போன்ற மருத்துவ கழிவுகளை பத்திரப்படுத்தி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.