அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் வெளியேற்றம்.. மயிலாடுதுறையில் சர்ச்சை! - Dravida Munnetra Kazhagam
மயிலாடுதுறை: செம்பனார் கோயிலில் பூம்புகார் சட்டமன்ற அலுவலகம் அருகே உள்ள பூம்புகார் தொகுதி மக்களின் குறைகளைத் தெரிவிக்கும் உதவி எண் மற்றும் இ சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர், ஆளும் கட்சி செய்தியாளர்களைத் தவிர மற்ற செய்தியாளர்கள் யாரும் படம் பிடிக்கச் செல்லக்கூடாது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கினர். பின், நிகழ்ச்சியில் இருந்த மற்ற செய்தியாளர்களை திமுகவின் தொண்டர்கள் உடனடியாக வெளியேற்றினர்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் செய்தி சேகரிக்க விடாமல் மரியாதை இன்றி பேசி பவுண்சர்கள் தடுத்தனர். இதனால் பவுண்சர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.