'எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை' - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு! - செந்தில் பாலாஜி
சென்னை: 'எடப்பாடி பழனிசாமி மக்கள் மீது அக்கறை கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் முழு நிதிநிலை அறிக்கையையும் உள்ளே அமர்ந்து கேட்டிருக்கலாம். ஆனால் உள்ளே அமர்ந்து கேட்கவில்லை' என தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு தலைமைச் செயலகத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தேர்தலில் போட்டியிட்டு கடனாளியாக உள்ளேன் என்கிறார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. காவல் துறையில் 8, 9 வருடம் பணியாற்றிய அண்ணாமலை எவ்வளவு சம்பாதித்தார்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். அரசு அறிவித்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்கிறார். பாஜக அரசு வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள். அதனை வட்டியுடன் கொடுப்பார்களா?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ''அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?’’ என கேள்வி எழுப்பிய அவர், ''தேர்தலில் அடுத்தடுத்த தோல்வியால் விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி'' என்றார். ''வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கோடநாடு கொலை சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்ததை மறந்துவிட்டு பேசுகிறார். அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை அதிமுக நிறைவேற்றாதது ஏன்? மகளிர் உரிமை தொகையில் யார் யார் பயன்பெறுவார்கள் என்ற வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் எளிதில் சந்திக்கும் அளவுக்கு தான் இருந்தார்கள். அதிமுக பிரசாரத்திற்குச் செல்ல மக்களுக்கு விருப்பம் இல்லை. நகர்ப்புற தேர்தலில் கூட அதிமுகவால் கோயம்புத்தூரில் வெற்றி பெற முடியவில்லை; அடுத்தடுத்த தோல்வியால் எடப்பாடி பழனிசாமி விரக்தியில் பேசுகிறார்.
கஞ்சா புழக்கம் யாருடைய ஆட்சியில் அதிகம் இருந்தது, யார் கையூட்டு பெற்றார்கள், யார் மீது எல்லாம் வழக்குப்பதிவு செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.1000 உரிமைத்தொகை அனைவருக்கும் கிடையாது.. டிடிவி தினகரன் விமர்சனம்..